தமிழ் மொழி மற்றும் சினிமா மீதும் ஆர்வமிக்கவர் கலைஞர். ஏராளமான திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும், சில படங்களிலில் தனது திராவிட சிந்தனைகளையும் மக்களுக்கு விதைத்தார்.
இவர் முதன் முதலாக பணியாற்றிய திரைப்படம் 1947-இல் வெளியான 'ராஜகுமாரி'. கலைஞர் இறுதியாக பணிபுரிந்த திரைப்படம் பொன்னர்சங்கர் சென்ற 2011 -ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமாவில் 75-க்கும் அதிகமான திரைப்படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.
தூக்குமேடை, மணிமகுடம், நானே அறிவாளி உள்ளிட்ட மேடை நாடகங்களில், கலைஞர் அவர்கள் நடித்துள்ளார்.
"பகட்டு என் தங்கையை துரத்தியது, பயந்து ஓடினாள். பணம் என் தங்கையை துரத்தியது, மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது - ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும், வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்" என்று கலைஞர் எழுதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வசனம் தமிழ் திரை வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய எண்ணத்தூரிகைகளில் உள்ள வார்த்தைகளை வசனமாக்கினார் கலைஞர்.
15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள் என தனது எழுத்துக்கள் மூலமாக, தமிழுக்கும், மக்களுக்கும் அரும் தொண்டாற்றியவர் நமது கலைஞர். 'உடன் பிறப்பே', 'நண்பனுக்கு' போன்ற தலைப்புகளில், 7000-த்திற்கும் அதிகமான மடல்களை இயற்றியுள்ளார்.
திருக்குறள் உரை, சங்கத்தமிழ், குறளோவியம்,தென்பாண்டி சிங்கம், ரோமாபுரி பாண்டியன் போன்ற 178-க்கும் அதிகமான உரைநடை, இலக்கிய நூல்களை எழுதியுள்ளார் கலைஞர். கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல், 'நெஞ்சுக்கு நீதி'.
ஐயன் வள்ளுவனுக்கு குமரியில் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம், 2010-இல் கோவையில் தமிழுக்காக பிரமாண்டமாக நடத்திய "செம்மொழி மாநாடு" உள்ளிட்ட செயல்களால் தமிழுக்கு பெருமை சேர்த்தார். கலைஞர் தமிழ் மீது வைத்த அளவற்ற காதல் அளப்பறியாதது.
கடந்த 2009-இல் "உலக கலைப்படைப்பாளி விருது"- பெற்றார். அரசியலில் தொண்டு, தமிழுக்கு ஆற்றிய சேவை, சினிமாவில் புதிய படைப்புகள் என பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 100-ஆவது பிறந்தநாளில் அவரது புகழ் பாடுவதில் பெருமை கொள்கிறோம். இக்கானகம் உள்ளவரை கலைஞரின் புகழ் சிறக்கட்டும்.
© 2023 அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.