உதயசூரியன் உதித்தது

1924-ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அன்றைய 'திருக்கோளிலி' என அழைக்கப்பட்ட திருக்குவளை எனும் கிராமத்தில், நாட்டுவைத்தியர் முத்துவேலருக்கும், அவரது துணைவியார் திருமதி அஞ்சுகம் அம்மையாருக்கும் 3-ஆவது மகனாக உதித்தவர் தான் தமிழக அரசியலில் கோலோச்சிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இவருக்கு பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு எனும் இரண்டு தமக்கையர்கள் உள்ளனர். கலைஞர் அவர்கள் தன்னுடைய இளம் வயதில் இருந்தே அரசியலில் மிகுந்த ஆர்வத்துடனும், துடிப்பான ஆற்றலுடனும் இருந்து வந்தார்.

சிறிய வயதிலிருந்தே போராட்ட குணமும், ஆராய்ந்து பேசக்கூடிய கல்வியறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாதவராகவும், சிறுவயது முதல் தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாகவும் இருந்துள்ளார். தன்னுடைய தகப்பனார் ஏற்பாடு செய்திருந்த இசைபயிற்சி வகுப்பில் ஏற்றத்தாழ்வுகளை உணர்ந்தவர், அங்கு முற்றிலுமாக செல்வதை தவிர்த்து விட்டார். இந்த இளம் சூரியன் தான் வருங்காலத்தில், தமிழகத்தையே ஆளக்கூடிய, இமாலய சூரியனாக உருவெடுக்கும் என்று பலருக்கும் அப்போது தெரிந்திருக்காது.